வேளாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட புதிய படிப்புகள் கொண்டு வரப்படும்

காந்திகிராம பல்கலைக் கழகத்தில் வேளாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட புதிய படிப்புகள் கொண்டு வரப்படும் என புதிய துணைவேந்தர் குர்மீத் சிங் கூறினார்.

Update: 2022-07-14 16:11 GMT

துணைவேந்தர் பேட்டி

புதுச்சேரி பல்கலைக் கழக துணைவேந்தர் குர்மீத் சிங், காந்திகிராம பல்கலைக் கழகத்தின் கூடுதல் (பொறுப்பு) துணைவேந்தராக நியமித்து மத்திய உயர்கல்வி துறை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து  குர்மீத் சிங் காந்திகிராம பல்கலைக் கழக (பொறுப்பு) துணைவேந்தராக பதவி ஏற்றார். நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகம் அறிந்த காந்தியின் பெயரால் உள்ள திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகம் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு வரபிரசாதமாகும். இது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகமாகும்.

காந்திகிராம பல்கலைக் கழகம் உள்பட நாட்டில் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப மத்திய உயர்கல்வி துறை விரைவில் அறிவிப்பு வெளியிட இருக்கிறது. புதிய கல்விக் கொள்கைப்படி காந்திகிராம பல்கலைக் கழகத்தில் இளநிலைப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பொது நுழைவு தேர்வு 'கியூட்' மூலம் நடைபெற உள்ளது. இந்த பல்கலைக் கழகத்தில் பல்வேறு படிப்புகளில் உள்ள 1,000 இடங்களுக்கு 86 ஆயிரம் பேர் 'கியூட்' நுழைவு தேர்வு எழுத உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.சி.ஏ.ஆர். அங்கீகாரம்

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- காந்திகிராம பல்கலைக் கழகத்தில் உள்ள பி.எஸ்சி. வேளாண்மை படிப்புக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் ஐ.சி.ஏ.ஆர். அங்கீகாரம் இல்லாததால் மற்ற பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி படிப்பதில் சிக்கல் உள்ளது?

பதில்:- பி.எஸ்சி. வேளாண்மை படிப்புக்கு ஐ.சி.ஏ.ஆர். அங்கீகாரம் இல்லாதது தெரியாது. இருந்தாலும் அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய படிப்புகள்

கேள்வி:- 'கியூட்' நுழைவு தேர்வால் தமிழக மாணவர்கள் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க காந்திகிராம பல்கலைக் கழக மாணவர் சேர்க்கையில் தமிழக மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு ஏதும் உண்டா?

பதில்:- புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் 'கியூட்' நுழைவு தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. சிறப்பு ஒதுக்கீடு இதில் இல்லை. இருப்பினும் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு இருக்காது.

மேலும் காந்திகிராம பல்கலைக் கழகத்தில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் வேளாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட வேலை வாய்ப்பு தரும் பல்வேறு புதிய படிப்புகள் கொண்டு வரப்படும். இந்த பல்கலைக் கழகத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்.

பேட்டியின்போது பதிவாளர் (பொறுப்பு) முரளிதரன் உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்