நெமிலியில் நெல் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

நெமிலியில் நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2023-08-25 11:49 GMT

ராணிப்பேட்டை, ஆக.26-

நெமிலியில் நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் அவர்கள் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள் விவரம் வருமாறு :-

விவசாயி :- கலவை தாலுகா மழையூர், வெள்ளம்பி ஆகிய பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி விடுகிறது. எனவே, மக்களின் நலன் கருதி சிறு பாலம் அமைக்க வேண்டும். ஏரி பாசன கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.

நெமிலி பகுதியில் நெற்பயிர்களை அறுவடை செய்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு அம்மூர் வரை கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. எனவே நெமிலியில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

வருவாய் அலுவலர் :- ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி: நியாய விலைக் கடைகளில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருவாய் அலுவலர் :- அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

டாஸ்மாக் கடை

விவசாயி: ஆற்காடு வட்டம் சாத்தூர் தாஜ்புரா மற்றும் பனப்பாக்கம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு அருகே அரசு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளதால், மது அருந்துபவர்கள் பாட்டில்களை உடைத்து விவசாய நிலத்திலும், சாலை ஓரத்திலும் வீசிவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக விவசாயிகளின் கால்களில் கண்ணாடி துண்டுகள் குத்தி பாதிப்பு ஏற்படுகிறது. இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வருவாய் அலுவலர் :- கலால் அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி: வாலாஜா அனந்தலை கிராமத்தில் கல்குவாரியில் இரவு, பகல் பாராமல் வெடி வைத்து பாறைகளை தகர்க்கின்றனர்.

வருவாய் அலுவலர் :- இது குறித்து கல்குவாரியில் விதி மீறல்கள் உள்ளதா என்பது குறித்து கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.

விவசாயி: இளம் விவசாயிகள் பாரம்பரிய விதைகளை கொண்டு பயிர் செய்வதில் ஆர்வமாக உள்ளனர். எனவே விவசாயிகளுக்கு இந்த வகை விதைகளை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வருவாய் அலுவலர் :- நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி: ஆற்காடு காய்கறி சந்தையில் விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களுக்கு ஒரு மூட்டைக்கு ரூ.50 கட்டணம் கட்டாயமாக வசூலிக்கின்றனர்.

வருவாய் அலுவலர் :- இது குறித்து ஆற்காடு நகராட்சி ஆணையாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு விவாதங்கள் நடந்தது.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் வேளாண்மை செல்வராஜ், நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திலகவதி, உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் தேவிபிரியா, துணை இயக்குனர் (தோட்டக்கலை) லதா மகேஷ் மற்றும் விவசாயிகள், துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்