தூத்துக்குடியில் கோலாகலமாக நடைபெறும் நெய்தல் கலை விழா

தூத்துக்குடியில் 3-வது நாள் நெய்தல் கலை விழா கனிமொழி எம்பி தலைமையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-07-09 16:13 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக் நிறுவனம் இணைந்து நடத்தும் நெய்தல் திருவிழா தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இவ்விழாவில் பாரம்பரியம்மிக்க மண்சார்ந்த கலைஞர்கள் தங்கள் குழுவினருடன் பங்கேற்று தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் விழா மைதானத்தில் உணவுத்திருவிழா, புத்தக கண்காட்சி கைவினைப்பொருட்கள் கண்காட்சி போன்றவையும் நடந்து வருகிறது.

நெய்தல் திருவிழாவின் சிறப்பாக இன்று மாலையில் தொடங்கிய 3-வது நாள் கலைவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணி வரை நடைபெறும். விழாவிற்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார்.

விழாவில் வில்லுப்பாட்டு, பறையாட்டம், சிலம்பாட்டம், துடும்பாட்டம், கரகாட்டம், இசைக்கச்சேரி, தெருக்கூத்து, குச்சி ஆட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் விடிய விடிய சிறப்பாக நடந்தது. இதனை ஏராளமானவர்கள் கண்டு களித்தனர்.

நெய்தல் திருவிழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நெய்தல் திருவிழாவின் நிறைவு விழா நாளை மாலை 4.45 மணிக்கு நடக்கிறது. இரவு 9 மணிக்கு கிடாக்குழி மாரியம்மாள் மற்றும் இளையராஜா குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் நெய்தல் விழா நிறைவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்