'நீட்' தி.மு.க.வின் பிரச்சினை கிடையாது.. மாணவர்களுக்கான பிரச்சினை: உதயநிதி ஸ்டாலின் பேட்டி

மாணவர்களின் மருத்துவ கல்வி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி கூறினார்.

Update: 2023-11-06 15:27 GMT

சென்னை,

'நீட்' தேர்வுக்கு எதிராக தி.மு.க. இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரியை சென்னை சத்தியமூர்த்திபவன் அலுவலகத்தில் கடந்த வாரம் சந்தித்து கையெழுத்து பெற்றார்.

இந்த நிலையில் அவர், சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்தார். அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி., துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ., உள்பட அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளிடம் 'நீட்' தேர்வுக்கு எதிராக கையெழுத்து பெற்றார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

'நீட்' விலக்கு நம் இலக்கு என்ற மாபெரும் கையெழுத்து இயக்கத்தை கடந்த 15 தினங்களுக்கு முன்பு தொடங்கினோம். 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளை பெற்று தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் தலைவரிடம் (முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்) கொடுக்க போகிறோம். அதன்பின்னர் டெல்லி சென்று ஜனாதிபதியிடம் வழங்க உள்ளோம். இதுவரையில் 10 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளது.

banneet.in என்ற இணையதளத்திலும் 'நீட்' தேர்வை ரத்து செய்வது தொடர்பான கருத்துகளை பதிவு செய்யலாம். இதில் 3.50 லட்சம் பேர் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இது தி.மு.க.வின் பிரச்சினை கிடையாது. இது அனைத்து மாணவர்களுக்கான பிரச்சினை. மருத்துவ கல்வி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்