விளாத்திகுளம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்;கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி

விளாத்திகுளம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியாகினர்.

Update: 2023-07-13 18:45 GMT

எட்டயபுரம்:

பெயிண்டர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 43). பெயிண்டர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (35), கூலி தொழிலாளி.

நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காலையில் விளாத்திகுளத்துக்கு வேலைக்கு சென்று விட்டு, மாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் தங்களது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

கல்லூரி மாணவர்கள்

கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்தவர் குமார் மகன் மதன்குமார் (21). ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் சுடலைமணி (20). இவர்கள் 2 பேரும் விளாத்திகுளம் அருகே வேம்பாரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தனர்.

இவர்கள் இருவரும் மாலையில் கல்லூரி முடிந்ததும் ஒரு மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டிக்கு புறப்பட்டு சென்றனர்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

விளாத்திகுளம்- வேம்பார் சாலையில் செவ்வலூரணி அருகில் சென்றபோது, எதிரே சண்முகராஜ், சண்முகம் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளின் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த சண்முகராஜ், சுடலைமணி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சண்முகம், மதன்குமார் ஆகிய 2 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.

2 பேருக்கு தீவிர சிகிச்சை

உடனே அவர்கள் 2 பேருக்கும் விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இறந்த சண்முகராஜ், சுடலைமணி ஆகிய 2 பேரின் உடல்களை விளாத்திகுளம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்