தட்டார்மடம் அருகே ஆடு திருடர்கள் 2 பேர் கைது

தட்டார்மடம் அருகே ஆடு திருடர்கள் 2 பேர் கைது

Update: 2023-07-03 18:45 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே ஆடு திருடிய இடத்தில் மீண்டும் கைவரிசை காட்ட வந்தபோது மோட்டார் சைக்கிளுடன் 2 திருடர்கள் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடு திருட்டு

தட்டார்மடம் அருகே உள்ள சித்தன்குடியிருப்பு மேலத்தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன் (வயது 73). விவசாயி. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேய்சென்ற இவரது ஆடு ஒன்று காணாமல் போனது. அந்த ஆட்டை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சித்தன்குடியிருப்பு - பெரியதாழை காட்டு பகுதியி்ல் ஆடுகளை மேயவிட்டு விட்டு அங்குள்ள மரத்தடியில் உட்கார்ந்திருந்தார். அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் அப்பகுதிக்கு வந்துள்ளனர்.

2 வாலிபர்கள் சிக்கினர்

அங்கு மேய்ந்து கொண்டிருந்த பரமசிவன் ஆடுகளில் ஒன்றை திருடி கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றனர். இதனை பார்த்த அவர் சத்தம் போட்டவுடன், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து மோட்டார் சைக்கிளில் திருடிய ஆட்டுடன் இருந்த 2 பேரையும் பிடித்து தட்டார்மடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சண்முகபுரம் ஆவரைக்குளத்தை சேர்ந்த சங்கர் மகன் சந்திரன் (24), சுயம்பு மகன் சுஜின் (20) என தெரியவந்தது.

மீண்டும் கைவரிசை

இதை தொடர்ந்து தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகம்மது ரபீக் வழக்குப்பதிவு செய்து சந்திரன், சுஜின் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். இந்த 2 பேர் தான் ஏற்கனவே பரமசிவத்தின் ஆட்டை திருடி சென்றவர்கள் என்றும், மீண்டும் ஆடுதிருட வந்தபோது சிக்கியதாகவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்