தாளவாடி அருகே மாட்டை கடித்துக்கொன்ற புலி; பொதுமக்கள் பீதி

தாளவாடி அருகே மாட்டை புலி கடித்துக்கொன்றதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

Update: 2022-10-06 21:27 GMT

தாளவாடி

தாளவாடி அருகே மாட்டை புலி கடித்துக்கொன்றதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

10 வனச்சரகங்கள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கேர்மாளம், ஜீர்கள்ளி உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை மற்றும் புலிகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை கடித்து கொல்வது தொடர்கதையாகி வருகிறது.

மாட்டை கடித்துக்கொன்ற புலி

இந்த நிலையில் தாளவாடி அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் புலி புகுந்து மாட்டை கடித்துக்கொன்ற சம்பவம் நடந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 54). விவசாயி. இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம் போல் அருகில் உள்ள நிலத்தில் மாடுகளை மேய்ச்சலுக்காக கட்டி இருந்தார். மாலை மாடுகளை வீட்டுக்கு ஓட்டிவருவதற்காக சென்றார். அப்போது பசு மாடு ஒன்று கழுத்து பகுதியில் கடிபட்டு இறந்துகிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுபற்றி ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மாட்டை பார்வையிட்டனர். பின்னர் அங்கு பதிவாகி இருந்த கால் தடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது புலி கடித்து மாடு இறந்து உள்ளதை உறுதி செய்தனர். கிராம பகுதியில் புகுந்து மாட்டை புலி கடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்