பந்தலூர் அருகே குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி
பந்தலூர் அருகே குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
பந்தலூர்: பந்தலூர் அருகே மூலைக்கடை முதல் எலியாஸ் கடை வரை செல்லும் சாலை உடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் சாலையின் குழியில் மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால் அந்த சாலை வழியாக வாகனங்களில் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக நோயாளிகளை பந்தலூர், கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அவசரமாக கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்கள் இந்த சாலையில் செல்ல சிரமப்படு கின்றன. மேலும் சில நேரங்களில் அந்த சாலையின் நடுவழியில் வாகனங்கள் பழுதாகி நின்றுவிடுகின்றன. அத்துடன் வனப்பகுதிகளை ஒட்டிய சாலை என்பதால் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகளின் அச்சுறுத்தலும், அவைகள் தாக்கும் அபாயமும் உள்ளது. இதனால் மூலைக்கடை முதல் எலியாஸ் கடை வரை குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.