கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்

கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.

Update: 2022-10-12 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் கிராமத்தில் நேற்று மக்கள் தொடர்பு முகாம், கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.

மக்கள் தொடர்பு முகாம்

கோவில்பட்டியை அடுத்துள்ள ஆவல்நத்தம் சமுதாய நலக்கூட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடந்தது.

முகாமிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பொது மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்கள் பெற்றார்.

பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கலெக்டரிடம் 130 மனுக்கள் கொடுக்கப்பட்டன. இவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி ஆய்வு செய்து அதற்கான பதில்களை 2 வாரத்திற்குள் தெரிவிப்பதாக கூறினார்.

முகாமில் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, தாசில்தார் சுசிலா, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் சுப்புலட்சுமி, சீனிவாசன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

முகாம் முடித்து கலெக்டர் செந்தில்ராஜ் திரும்பும் போது, மூப்பன்பட்டி காலனி அருகே சாலையில் லிங்கம்பட்டி கிராம மக்கள், மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழக தலைவர் அன்புராஜ் தலைமையில் அமர்ந்திருந்தனர்.

பட்டா வழங்க வேண்டும்

காரில் இருந்து இறங்கிய கலெக்டர் அவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்றார். அந்த மனுவில், "லிங்கம்பட்டி கிராமத்தில் 30 ஆண்டுகளாக குடியிருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பட்டா வழங்க கோரி, கடந்த 10 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம், உதவி கலெக்டர், தாசில்தாரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று கூறியிருந்தனர்.

அதற்கு பதில் அளித்த கலெக்டர், விரைவில் மனுக்களை பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்