காஞ்சிக்கோவில் அருகே பரபரப்பு கீழ்பவானி வாய்க்காலுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம் சீரமைப்பு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்தது
காஞ்சிக்கோவில் அருகே சீரமைப்பு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கீழ்பவானி வாய்க்காலுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெருந்துறை
காஞ்சிக்கோவில் அருகே சீரமைப்பு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கீழ்பவானி வாய்க்காலுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உண்ணாவிரத போராட்டம்
கீழ்பவானி வாய்க்காலுக்குள்ளும் அதன் கரை ஓரங்களிலும் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது என்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு கீழ்பவானி பாசன விவசாயிகள் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கூரபாளையம் பிரிவு அருகே 7 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி போராட்டம் நடந்த கடைசி நாளில் அங்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அமைச்சர், அனைத்து விவசாயிகளுக்கும் பாதிப்பில்லாத வகையில் வாய்க்கால் கரை ஓரங்கள் பலப்படுத்தப்படும். மேலும், ஆகஸ்டு 15-ந்தேதி முதல், கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீரை திறந்து விட வேண்டியிருப்பதால், தற்போது கீழ்பவானி வாய்க்காலில் இருந்து தொடங்கப்பட்ட சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். எனவே அதற்கு ஒத்துழைப்பு தரும் வகையில், விவசாயிகள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
வாய்க்காலுக்குள் இறங்கி போராட்டம்
அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள், தங்களது உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு காஞ்சிக்கோவில் கருங்கரடு என்ற இடம் அருகே செல்லும் கீழ்பவானி பிரதான வாய்க்காலுக்குள் சீரமைப்பு பணி நடந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் வாய்க்கால் சீரமைப்பு ஒப்பந்ததாரர்கள் பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு வாய்க்கால் கரையில் உள்ள மண்ணை அகற்றி உள்ளனர்.
இதுபற்றி அறிந்த அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ஆத்திரம் அடைந்தனர். கீழ்பவானி வாய்க்கால் கரையை பலப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை கருங்கரடுவில் ஒன்று திரண்டனர். பின்னர் அங்குள்ள வாய்க்காலுக்குள் இறங்கி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலந்தாலோசித்து முடிவு
இதுகுறித்த தகவல் அறிந்ததும் பெருந்துறை தாசில்தார் பூபதி, பெருந்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், காஞ்சிக்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி, பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் சபரிநாதன், காஞ்சிக்கோவில் வருவாய் ஆய்வாளர் சாதிக்கான் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள், 'இந்த மாதம் இறுதிவரை வாய்க்கால் கரையில் எவ்வித சீரமைப்பு பணியும் நடைபெறாது. இந்த பிரச்சினை குறித்து அரசுடன் கலந்து ஆலோசனை செய்து இறுதி முடிவு எடுக்கப்படும்' என்று கூறினார்கள். இதனை விவசாயிகள் ஏற்றுக்கொண்டு பகல் 11 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டனர்.
விவசாயிகள் நடத்திய இந்த திடீர் போராட்டத்தால் கருங்கரடு பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது.