ஈரோடு அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Update: 2023-09-19 21:47 GMT

மொடக்குறிச்சி

ஈரோடு அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

ஈரோடு லக்காபுரம் அருகே உள்ள முத்துகவுண்டம்பாளையம் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து உள்ளனர். எனினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஒன்று திரண்டு ஈரோடு- முத்தூர் மெயின் ரோட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறுகையில், 'கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நாங்கள் குடிநீர் சரியாக கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே எங்களுக்கு குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு போலீசார் பதில் அளிக்கையில், 'இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்