சேத்தியாத்தோப்பு அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.5 லட்சம் நகை கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சேத்தியாத்தோப்பு அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.5 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-12-15 19:30 GMT

சேத்தியாத்தோப்பு, 

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சாக்காங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி லதா (வயது 46). மணிமாறன் இறந்து விட்டதால் லதா தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர், சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு திடுக்கிட்ட அவர், பீரோ இருந்த அறைக்கு சென்று பார்த்தார். அப்போது பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன.

ரூ.5 லட்சம்

மேலும் பீரோவில் வைத்திருந்த 14 பவுன் நகைகளை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. திருடுபோன நகைகளின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், சோழத்தரம் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

தடயங்கள் சேகரிப்பு

மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி, அங்குள்ள மெயின்ரோடு வரை சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதற்கிடையே தடயவியல் நிபுணர்களும் வந்து, மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்ததுடன், தடயங்களை சேகரித்து சென்றனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்