பவானி அருகேபிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை தேர்வில் தோல்வி அடைந்ததால் விபரீத முடிவு

பவானி அருகே தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்

Update: 2023-05-20 22:23 GMT

பவானி அருகே தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு் தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ்-1 மாணவர்

ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன்பாளையம் அருகே உள்ள ராமன் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் இறந்துவிட்டார். இவருடைய மனைவி தமிழ்செல்வி. இவர்களுடைய மகன் தானேஸ்வரன் (வயது 16), மகள் மகா ஸ்ரீ (12).

தமிழ்ச்செல்வி சித்தோடு அருகே உள்ள ஆவின் கூட்டுறவு ஒன்றியத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். அந்தியூர் பருவாச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் தானேஸ்வரன் பிளஸ்-1 படித்து வந்தார். மகாஸ்ரீ 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

தேர்வில் தோல்வி

தற்போது நடந்து முடிந்த பிளஸ்-1 பொதுத்தேர்வை தானேஸ்வரன் எழுதியிருந்தார். இதன் தேர்வு முடிவு நேற்றுமுன்தினம் வெளியானது. இதில் தானேஸ்வரன் 600 மதிப்பெண்களுக்கு மொத்தம் 205 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். அதுவும் தமிழ் பாடத்தில் மிகவும் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்தார்.

தேர்வு முடிவை பார்த்ததில் இருந்து தானேஸ்வரன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு் வந்தார். இதனால் நேற்று முன்தினம் முழுவதும் வீட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்து வந்துள்ளார்.

தூக்கில் தொங்கினார்

இந்தநிலையில் இரவு 7.30 மணி அளவில் தானேஸ்வரன் குளித்துவிட்டு வருவதாக மகாஸ்ரீயிடம் கூறிவிட்டு குளியல் அறைக்கு சென்றார். பின்னர் குளிப்பது போல் தெரிவதற்காக தண்ணீர் குழாயை திறந்து விட்டுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் தானேஸ்வரன் வெளியே வராததால் மகாஸ்ரீ கதவை தட்டிப்பார்த்துள்ளார். கதவு திறக்கப்படவில்லை. இதனால் மகாஸ்ரீ சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு தானேஸ்வரன் தாயின் சேலையால் தூக்குப்போட்டு் தொங்கிக்கொண்டிருந்தார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

சாவு

பின்னர் தானேஸ்வரனை மீட்டு் சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு தானேஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்