கரூர் மாவட்ட கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது

fநவராத்திரி விழா தொடங்கியதால் கோவில்களில் கொலு வழிபாடு நடந்தது.;

Update:2023-10-15 22:57 IST

நவராத்திரி விழா

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றானது நவராத்திரி விழா. நவராத்திரி விழா என்பது மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி 9 நாள்கள் போரிட்டு 10-வது நாளில் அவனை வதம் செய்து வெற்றி கொண்டதாக நம்பப்படுகிறது. இதனை நினைவு கூரும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது.

இதையொட்டி கரூர் மாவட்டத்தில் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு தொடங்கினர். இதேபோல கோவில்களிலும் கொலு வழிபாடு தொடங்கியது. கரூர் ஈஸ்வரன் கோவிலில் நவராத்திரி விழாவுக்காக கொலு அமைப்பட்டுள்ளது. இதில் கடவுள் பொம்மைகள், இயற்கை காட்சி, வனவிலங்குகள் உள்ளிட்ட பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.

விழாவின் முதல் நாளான நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தாா். மேலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நொய்யல்

புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டி உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி முதல் நாளையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல், சேமங்கி, நன்செய் புகழூர், புன்னம், திருக்காடுதுறை தவுட்டுப்பாளையம் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்