கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.;
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஆலந்துறையார் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், கோதண்டராமசாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. ஆலந்துறையார் கோவிலில் அம்மனுக்கு நேற்று மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு துர்க்கை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் பலர் அம்மனை வேண்டி பாடல்களை பாடி வழிபட்டனர். இதில் பல்வேறு பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
அரியலூர் பெரிய கடை வீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன், கிருஷ்ணன் கோவில் தெரு மகாகாளியம்மன், மேளக்கார தெரு மாரியம்மன் கோவில்களில் நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மகா காளியம்மன் கோவிலில் அம்மன் சிவலிங்கத்திற்கு பூஜை செய்வது போல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இதேபோல் பக்தர்கள் பலர் தங்கள் வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து வழிபட்டனர். மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று நவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.