வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா: அன்னபூரணி அலங்காரத்தில் அம்மன் தரிசனம்

சென்னை வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழாவின் 3-ம் நாளான நேற்று, அன்னபூரணி அம்மன் அலங்காரத்தில் கொலு அமைக்கப்பட்டிருந்தது. அம்மனை பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டு சென்றனர்.

Update: 2022-09-28 21:43 GMT

சென்னை,

சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 'சக்தி கொலு' என்ற பெயரில் 9 படிகள் கொண்ட பிரமாண்ட கொலு கோவிலின் 4 திசைகளிலும் வைக்கப்பட்டு உள்ளது. 2-ம் நாளான நேற்று முன்தினம் 'சக்தி கொலு'வில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நவராத்திரி திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்வு நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமஹம், ஸ்ரீ சுக்தம் நடந்தது.

அன்னபூரணி அம்மன் அலங்காரத்தில் கொலு அமைக்கப்பட்டது. கோவில் பெண் பணியாளர்கள் மற்றும் தரிசனத்துக்கு வந்த பெண் பக்தர்கள் 3-ம் நாள் சக்தி கொலுவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

கொலு பொம்மைகள் பற்றிய விளக்கம்

அதனைத்தொடர்ந்து பக்தர்களின் கொலு பாட்டு நடந்தது. இரவு, ஸ்ரீகாந்த் பாகவதர் மற்றும் குழுவினரின் இசைக்கச்சேரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை பரவசத்துடன் வழிபட்டனர். கொலுவையும் பார்த்து ரசித்தனர்.

சக்தி கொலுவில் இடம்பெறும் பொம்மைகள் குறித்து பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில் கொலு பொம்மை குறித்த விளக்கங்கள் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஏராளமான ஆன்மிக தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

சில அரிதான பொம்மைகள் எந்த வரிசையில், எந்த படியில் இருக்கிறது? என்ற விவரம் மற்றும் தமிழக முருகன் கோவில்கள் விவரமும் தனித்தகவலாக அளிக்கப்பட்டு உள்ளது.

நவராத்திரி திருவிழா அக்டோபர் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்