ராமேசுவரம் கோவிலில் நவராத்திரி திருவிழா

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நவராத்திரி திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

Update: 2023-10-12 18:45 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நாளை(சனிக்கிழமை) அம்பாள் சன்னதியில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. முதல் நாளான 15-ந் தேதி இரவு 7 மணிக்கு அம்பாள் சன்னதியில் கொலுமண்டபத்தில் பர்வத வர்த்தினி அம்பாள் அன்னபூரணி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். 2-வது நாள் மகாலட்சுமி, 3-வது நாள் சிவதுர்க்கை, 4-வது நாள் சரசுவதி, 5-வது நாள் கவுரி சிவபூஜை, 6-வது நாள் சாரதாம்பிகை, 7-வது நாள் கஜலட்சுமி, 8-வது நாள் மகிஷாசுரமர்த்தினி, 9-வது நாள் அம்பாள் துர்க்கை, லட்சுமி, சரசுவதி உள்ளிட்ட அவதாரங்களிலும் கொலுமண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

முக்கிய நிகழ்ச்சி மற்றும் கடைசி நாள் நிகழ்ச்சியாக 24-ந் தேதி மாலை 6 மணிக்கு கோவிலில் இருந்து சாமி அம்பாள் பத்ரகாளி அம்மன் கோவில் எதிரே உள்ள மகர நோன்பு திடலுக்கு எழுந்தருளி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. விழா ஏற்பாடுகளை கோவிலின் தக்கார் பழனி குமார், இணை ஆணையர் சிவராம் குமார் தலைமையில் உதவிக்கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், பேஷ்கார் கமலநாதன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதேபோல் கோவில் எதிரே அகனி தீர்த்த கடற்கரை அருகே உள்ள காஞ்சி காமகோடி சங்கர மடத்திலும் நவராத்திரி திருவிழா நாளை காப்பு கட்டுதலுடன் தொடங்குகின்றது. இதற்கான ஏற்பாடுகளை மடத்தின் மேலாளர் ஆடிட்டர் சுந்தர் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்