தேசிய புலிகள் ஆணைய குழுவினர் வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை
நீலகிரி வனப்பகுதியில் 10 புலிகள் இறந்த விவகாரம் தொடர்பாக, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும் புலிகள் இறந்து கிடந்த வனப்பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
ஊட்டி
நீலகிரி வனப்பகுதியில் 10 புலிகள் இறந்த விவகாரம் தொடர்பாக, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும் புலிகள் இறந்து கிடந்த வனப்பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
10 புலிகள் சாவு
நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீதம் வனப்பகுதி உள்ளது. இதில் நீலகிரி மற்றும் கூடலூர் வனக்கோட்டம், முதுமலை புலிகள் காப்பகம், முக்குறுத்தி தேசிய பூங்காவாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட புலிகள் மற்றும் பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்தியாவில் புலிகள் அதிகமாக உள்ளதில், முதுமலை புலிகள் காப்பகம் 3-வது இடத்தில் இருக்கிறது.
இந்தநிலையில் நீலகிரி வனக்கோட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக உள் மண்டல, வெளி மண்டலத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் 6 புலிக்குட்டிகள் உள்பட 10 புலிகள் இறந்தன. இது வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் புலிகள் உயிரிழப்பு குறித்து உயர்மட்ட குழு விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
வனத்துறையினரிடம் விசாரணை
இந்தநிலையில் புலிகள் தொடர்ந்து உயிரிழந்தது குறித்து நேரில் விசாரிக்க தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய குற்ற பிரிவு ஐ.ஜி. முரளிகுமார், மத்திய வனவிலங்கு குற்ற தடுப்பு பிரிவு தென் மண்டல இயக்குனர் கிருபா சங்கர், மத்திய வனவிலங்கு ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று ஊட்டிக்கு வருகை தந்தனர்.
பின்னர் அவர்கள் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், வெளிமண்டல துணை கள இயக்குனர் அருண், நீலகிரி வன கோட்ட அலுவலர் கவுதம் ஆகியோருடன் விசாரணை நடத்தினர். அப்போது 6 புலிக்குட்டிகள் உள்பட 10 புலிகள் இறந்தது எப்படி?, அதற்கான காரணம் என்ன?, இந்த ஆண்டு புலிகள் மற்றும் யானைகளின் இறப்பிற்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
ஆய்வு
இதைத்தொடர்ந்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் 4 புலிக்குட்டிகள் இறந்து கிடந்த சின்ன குன்னூர் வனப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் விஷம் வைத்து 2 புலிகள் கொல்லப்பட்ட எமரால்டு பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டனர். புலிகள் இறப்பு சம்பந்தமாக வனத்துறையினரின் அறிக்கையை விரிவாக ஆய்வு செய்தனர். இந்த விசாரணையை முடித்த பின்னர், டேராடூனில் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.