தஞ்சை கலெக்டருக்கு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீசு

தஞ்சை அருகே பள்ளியில் வைத்து போலீசாரால் மாணவர்கள் தாக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிற்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது.

Update: 2023-10-24 20:00 GMT

அரசு மேல்நிலைப்பள்ளி

தஞ்சையை அடுத்த வல்லம் அண்ணா நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 500-க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் உள்பட 14 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் பள்ளி மைதானத்தில் நடந்து வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் வீசிய கல் அவர் தலையில் விழுந்து காயம் ஏற்பட்டது.

கல்வீசி தாக்கியதாக புகார்

இதுகுறித்து ஆசிரியை வல்லம் போலீசில் மாணவர்கள் யாரோ கல்வீசி தாக்கியதாக புகார் மனு அளித்துள்ளார். இந்த நிலையில் ஆசிரியையின் கணவர் தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார்.

இதனால் போலீசார் சிலர் அந்த பள்ளிக்கு சாதாரண உடையில் வந்து விசாரணை என்ற பெயரில் மாணவர்களை கம்ப்யூட்டர் ஆய்வகத்தில் வைத்து விசாரித்ததாகவும், அப்போது போலீசார் மாணவர்களை தாக்கியதாகவும் பெற்றோர்கள் குற்றச்சாட்டு எழுப்பி பள்ளியை முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கலெக்டருக்கு நோட்டீசு

இந்த நிலையில் இந்த புகார்கள் மற்றும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அனுப்புமாறு தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிற்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீசு அனுப்பியுள்ளது.

மேலும் விசாரணையை அறிக்கையை ஒரு வாரத்திற்குள் அனுப்புமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்