நாமபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

நாமபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-03-27 18:56 GMT

ஆலங்குடி:

சீர்வரிசை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உள்ள தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோவில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவிலாகும். திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருஸ்தலத்திற்கு அடுத்தபடியாக இந்த கோவில் 2-வது குருஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு, கோவிலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று, நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு, சிவாச்சாரியார்கள் பல்வேறு பூஜைகளை செய்து வந்தனர். மேலும் கும்பாபிேஷக விழாவிற்காக, ஆலங்குடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் மற்றும் அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் மற்றும் பெண்கள் ஊர்வலமாக சீர்வரிசை எடுத்து வந்தனர். இதேபோல் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அவற்றை கோவில் நிர்வாகத்தினர் பெற்றுக்கொண்டனர்.

கும்பாபிஷேகம்

இந்நிலையில் நேற்று காலை 5 மற்றும் 6-ம் கால யாக பூைஜகள் நடைபெற்றன. இதையடுத்து பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேளதாளங்கள் முழங்க கோவிலின் ராஜகோபுரத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் வானில் கருட பகவான் வட்டமிட, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, கோபுர கலசத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது.

தண்ணீர் பாட்டில் வழங்கிய ஜமாத்தார்கள்

மேலும் கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு ஆலங்குடி பெரிய பள்ளிவாசல் ஜமாத்தார்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் தண்ணீர் பாட்டில் வழங்கியது, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக இருந்தது. மேலும் தனியார் அமைப்பு சார்பில் மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம், செயல் அலுவலர் பாலசுப்ரமணியன், தொழிலதிபர் அபிராமி ஸ்டீல்ஸ் சசிகுமார், ஆர்.எஸ்.ஆயில் மில்ஸ் சேதுமாதவன் செட்டியார், வியாபாரிகள் சங்க தலைவர் மனமோகன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் உஷா செல்வம், மாடர்ன் மெட்ரிக் பள்ளி தாளாளர் இளந்தென்றல், ஹோலி கிராஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் கருப்பையா, சட்ட ஆலோசகர் விஜயா, ஸ்ரீகுபேரன் தங்க மாளிகை உரிமையாளர் ராக்பெல்லர் மற்றும், அரசு அதிகாரிகள், சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையிலான மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேரில் வீதி உலா

இதைத்தொடர்ந்து நேற்று இரவில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. முன்னதாக வல்லநாட்டு நகரத்தார்கள் ஆலங்குடி செட்டிகுளம் தென்கரையில் உள்ள சித்திவிநாயகர் கோவிலில் இருந்து சுவாமி, அம்பாளுக்கு பட்டாடை மற்றும் சீர் சுமந்து ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து சுவாமி-அம்பாளுக்கு பட்டு உடுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ேதரோடும் வீதியில் பட்டின பிரவேசம் செய்ய தேரில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். கோவிலில் தொடங்கி அனைத்து பிரதான வீதிகளின் வழியாக தேர் சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கோவில் வளாகத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்