நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

Update: 2023-03-13 19:30 GMT

ஜேடர்பாளையம் அருகே பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் உண்மை குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண் படுகொலை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையத்தை சேர்ந்தவர் விவேகானந்தன். இவருடைய மனைவி நித்யா (வயது27). கடந்த 11-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற நித்யா மேலாடை கிழிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் நித்யா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்த அவருடைய உறவினர்கள் கொலையாளியை கைது செய்ய வலியுறுத்தி திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் உடலை பெற்றுக்கொள்ளவில்லை.

முற்றுகை போராட்டம்

இதற்கிடையே 2-வது நாளாக நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் செய்தனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர்கள் உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும். எங்கள் பகுதியில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அவர்களிடம் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், குற்றவாளியை அடையாளம் கண்டு கைது செய்துவிட்டோம். இந்த வழக்கு தொடர்பாக உங்களிடம் மேலும் கோரிக்கை இருந்தால் தெரிவியுங்கள். அதை பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

கலெக்டரிடம் மனு

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதையொட்டி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்