தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் நல வாரிய செயல்பாடுகள் குறித்து நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நேற்று மதியம் 12 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்காக கண்காணிப்புக்குழு உறுப்பினர்களுக்கு தொழிலாளர் உதவியாளர் ஜெயலட்சுமி கடிதம் அனுப்பி இருந்தார். இதையொட்டி கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் பல்வேறு கூட்டங்கள் காரணமாக மாலை வரை கூட்டம் நடைபெறவில்லை.
பின்னர் மாலை கூட்ட அரங்கிற்குள் சென்ற கண்காணிப்புக்குழு உறுப்பினர்களை அதிகாரிகள் வெளியே போக சொன்னதாக கூறப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்காணிப்புக்குழு உறுப்பினர்களும், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளான தனசேகரன், சிவராஜ், சுந்தரமூர்த்தி, தமிழ்ச்செல்வி, நீலவானத்து நிலவன் ஆகியோர் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துவிட்டு தற்போது அதிகாரிகள் மரியாதை குறைவாக நடத்துவதாக கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த மாவட்ட தொழிலாளர்கள் அலுவலர் திருநந்தன், தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் மீண்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்றனர். பின்னர் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.