வாணியம்பாடி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது
ஆந்திராவில் சட்ட கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து வாணியம்பாடி அருகே நாம் தமிழர் கட்சியினர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர்.;
வாணியம்பாடி:
ஆந்திர மாநிலம், திருப்பதி, எஸ்.ஆர்.புரம் வடமாலாபேட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடியில் தமிழக மாணவர்களும், மக்களும் சுங்கச்சாவடி ஊழியர்களாலும், உள்ளூர் ஆட்களாலும் ஆயுதங்களைக் கொண்டு மிகக்கொடூரமான முறையில் தாக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலை கண்டித்து 75 க்கும் மேற்பட்ட நாம்தமிழர் கட்சியினர் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்பொழுது திடீரென சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனத்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் 75க்கும் மேற்பட்ட நாம் தமிழர்கட்சியனரை அம்பலூர் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.