நள்ளிரவில் வீடுகளின் கதவை தட்டிய மர்மநபர்கள்

நள்ளிரவில் வீடுகளின் கதவை மர்ம நபர்கள் தட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-23 20:33 GMT

துறையூரில் உள்ள 23, 24 வார்டுகள், துறையூர் புறவழிச்சாலையில் மிக அருகே அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. 2 வார்டுகளிலுமே குறுக்கு சந்துகள் அதிகமாக உள்ளன. இந்த சந்துகளில் மர்ம நபர்கள் ஆங்காங்கே அமர்ந்து மது அருந்துவது வழக்கம்.

இந்நிலையில் துறையூர் புறவழிச்சாலை அருகே உள்ள செல்வம் நகரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் எதிரெதிரே உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவில் முகத்தை மூடியிருந்த மர்ம நபர்கள், செல்வம் நகரில் உள்ள வீடுகளின் கதவை தட்டியுள்ளனர். அப்போது மாடியில் படுத்திருந்த ஒரு வீட்டின் உரிமையாளர், மின்விளக்கை எரியவிட்டு மர்மநபர்களை கண்டு கூச்சலிட்டுள்ளார்.

சத்தம் ேகட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த சில மாதங்களாக சுமார் 40-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. துறையூர் புறவழிச்சாலை மற்றும் முசிறி பிரிவு சாலை, திருச்சி ரோடு ஆகிய பகுதிகளில் அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் வீதியில் திரண்டு நின்றனர். மேலும் இது பற்றி அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், இரவு நேரத்தில் இங்கு பெண்கள் கடைக்கு கூட செல்ல முடியாத அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வீடுகளின் கதவைத் தட்டி மர்ம நபர்கள் ரகளையில் ஈடுபடுகிறார்கள். நள்ளிரவுக்கு மேல் சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. ஆனால் இப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவில்லை. பெரிய அளவில் குற்ற சம்பவங்கள் நடைபெறும் முன்பு மர்ம நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்