தினந்தோறும் திட்டங்களை தீட்டுவதுதான் எனது பணி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மாநிலம் என்பது எல்லைகளால் உருவானது அல்ல எண்ணங்களால் உருவானது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், உயர்தர கல்வி, உயர்தர மருத்துவம் என்ற இலக்கை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறோம். முதல்-அமைச்சராக பதவி ஏற்றவுடன் முதலில் கையெழுத்திட்ட கோப்பு 'இலவச பேருந்து பயணம். பெண்கள் இலவச பேருந்து பயண திட்டத்தில், இதுவரை 236 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மகளிர் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது. தூய்மை பணியாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்ற தனியாருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம். மாநிலத்தின் பல்வேறு பகுதியில் படிப்படியாக இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
குழந்தைகள் நலனை காக்க சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம். இளைஞர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் வகையில் உள்ள 'நான் முதல்வர் திட்டம்', தமிழக மாணவர்கள், இளைஞர்கள், கல்வி, சிந்தனை திறனில் முன்னேற்றவே நான் முதல்வர் திட்டம்.
தி.மு.க. அரசு ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல் திட்டத்தை ஆட்சிக்கு வருவதற்கு முன்பே சொன்னேன். சுமார் 52 ஆண்டு அரசியலுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன். தினந்தோறும் திட்டங்களை தீட்டுவதுதான் எனது பணி. மாநிலம் என்பது எல்லைகளால் உருவானது அல்ல எண்ணங்களால் உருவானது. ஏற்றமிகு தமிழ்நாடே' என ஒவ்வொருவரும் பெருமையுடன் அழைக்கும் நிலையை உருவாக்குவோம்.
தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக ஆக்கும் திட்டம் சென்னையில் விரைவில் செயல்படுத்தப்படும். நவீன இயந்திரங்கள் மூலம் பாதாளச் சாக்கடை கழிவுகள் அகற்றபட உள்ளன. தூய்மைப் பணியார்களுக்கு தகுந்த பாதுகாப்பை மேம்படுத்த திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.