முத்தூர் அருகே உள்ள முத்துமங்களம் ஆராய்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகிய இருவரும் நேற்று காலை கொடுமுடியில் நடந்த உறவினர் இல்ல விசேஷத்திற்கு சென்று விட்டனர்.
பின்னர் செந்தில்குமார் தனது மனைவி சங்கீதாவுடன் நேற்று மதியம் கொடுமுடியில் இருந்து மதியம் தங்களது வீட்டிற்கு வந்தனர். முன்புற காம்பவுண்டு கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைத்து இருந்த 11¾ பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது.
செந்தில்குமார் உடனடியாக வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் திருப்பூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து வீட்டில் பதிவாகி இருந்த திருடர்களின் கைரேகைகளை பதிவு செய்து தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து தங்க நகைகளை திருடி சென்று விட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.