3 ஆண்டுகளாக பூட்டியிருந்த முத்துமாரியம்மன் கோவில் திறப்பு

தென்னிலைப்பட்டியில் 3 ஆண்டுகளாக பூட்டியிருந்த முத்துமாரியம்மன் கோவில் திறக்கப்பட்டது. இதையடுத்து, கிராம மக்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2023-06-23 18:54 GMT

விராலிமலை தாலுகா, மேலபச்சகுடி ஊராட்சிக்குட்பட்ட தென்னிலைப்பட்டியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் , விநாயகர் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் யார் முன்னுரிமை பெறுவது என்று இரு சமூகத்தினருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2021 முதல் கோவில் பூட்டப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக தென்னிலைப்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் ஊர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விராலிமலை தாலுகா அலுவலகத்தில் இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. அதில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரும் பேசி முடிவு செய்த பின்னர் அடுத்த ஆண்டு திருவிழா நடத்துவது என்றும் அதுவரை பொதுவான அர்ச்சகரை கொண்டு கோவிலை திறந்து நித்தியகால பூஜை நடத்துவது என்றும் இரு தரப்பினரிடையே முடிவு செய்யப்பட்டு உடன்பாடு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று தென்னிலைப்பட்டி முத்துமாரியம்மன் கோவிலை அறநிலைய துறையின் தஞ்சாவூர் இணை ஆணையர் ஞானசேகரன், புதுக்கோட்டை உதவி ஆணையர் அனிதா, திருக்கோவில் தக்கார் சந்திரசேகரன், குளத்தூர் சரக ஆய்வாளர் யசோதா, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், மாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் முருகையன், திருக்கோவில் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் பக்தர்கள் வழிபாட்டிற்காக கோவில் திறக்கப்பட்டு நித்திய பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு தென்னிலைபட்டி கிராம பொதுமக்கள் தங்களது கிராம கோவிலில் அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்