பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-29 19:48 GMT

சிறப்பு தொழுகை

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. தியாக திருநாள் என்று அழைக்கப்படும் இந்த நாளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். இதில் திருச்சி மாநகரில் 101 பள்ளிவாசல்களிலும், 28 திறந்தவெளி மைதானங்களிலும் மற்றும் ஒரு உள்ளரங்கத்திலும் கூட்டு தொழுகை நடைபெற்றது. மேலும் திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பிலும், திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசு சையது முர்துசா பள்ளியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பிலும் நேற்று காலை சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

புத்தாடை அணிந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என திரளானோர் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதன் பின்னர் ஆடு, மாடு போன்றவற்றை குர்பானி கொடுத்து, அந்த இறைச்சியின் ஒரு பங்கை ஏழை, எளியவர்களுக்கும், ஒரு பங்கை உற்றார் உறவினர்களுக்கும், ஒரு பங்கை தங்களுக்கும் என பிரித்து கொடுத்து, தியாக திருநாளை கொண்டாடினர்.

மணப்பாறை

இதேபோல் மணப்பாறையில் உள்ள ஈத்கா திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். பின்னர் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதையடுத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரை ஒருவர் கட்டியணைத்து தங்களின் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

முன்னதாக அனைவரும் புத்தாடை அணிந்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை கூறி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல் புத்தாநத்தம், துவரங்குறிச்சி, வளநாடு, இளங்காகுறிச்சி, மாகாளிப்பட்டி, வையம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்