சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த இளம்பெண் கொலை வழக்கு: மேலும் 3 பேர் கைது
இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய்- தந்தையை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நெய்வவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது46). இவருடைய மனைவி ரோஜா (48). இவர்களுடைய மகள் ஐஸ்வர்யா (20). இவரும் பக்கத்து ஊரை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த ஒரு வாலிபரும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் கடந்த சில ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவை உறவினர்கள் சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். பின்னர் மரத்தில் தூக்குப்போட்டு ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டதாக கூறி, போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் அவருடைய உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் வாலிபர் வாட்டாத்திக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஐஸ்வர்யா மாற்று சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால், ஆத்திரம் அடைந்த அவருடைய தந்தை பெருமாள், தாய் ரோஜா மற்றும் சிலர் ஐஸ்வர்யாவை கொலை செய்து அவருடைய உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் தாயார் ரோஜா ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து பட்டுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் பெண்ணின் உறவினர்களான நெய்விடுதி கிராமத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.