மோகனூர் அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை
மோகனூர் அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை
மோகனூர்:
மோகனூர் அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கூலித்தொழிலாளி
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே சுண்டக்கா செல்லாண்டியம்மன் கோவில் அருகே உள்ள வாய்க்கால் கரையோரம் முகம், தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக மோகனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அதில் பிணமாக கிடந்தவர் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருேக உள்ள நாகைநல்லூர் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து மணிவண்ணன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மணிவண்ணன் கொலை செய்யப்பட்டது குறித்து அவருடைய தாயார் மற்றும் அக்காளுக்கு தகவல் தெரிவித்தனர்.
கொலை
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கூலித்தொழிலாளியான மணிவண்ணனுக்கு திருச்செல்வி என்ற மனைவியும், நர்மதா (20), பவித்ரா (18) என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் 2 பேரும் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவரை பிரிந்த திருச்செல்வி கடந்த 10 ஆண்டுகளாக மகள்களுடன் தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது. மணிவண்ணன் தனது தாயார் பட்டியம்மா (70) வீட்டில் வசித்து வந்தார்.
இதற்கிடையே திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் நாகைநல்லூர் ஏரி கரையோரம் ரத்தம் படிந்து கிடப்பதாக தெரியவந்துள்ளது. எனவே மர்மநபர்கள் அங்கு மணிவண்ணணை வெட்டி கொன்று விட்டு உடலை வாய்க்கால் கரையோரம் வீசி சென்றார்களா? அல்லது மணிவண்ணன் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? முன்விரோதம் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் மோகனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.