சித்தாலப்பாக்கத்தில் தனியார் பள்ளி பஸ் மீது மாநகர பஸ் மோதல்; மாணவி உள்பட 5 பேர் காயம்
சித்தாலப்பாக்கத்தில் தனியார் பள்ளி பஸ் மீது மாநகர பஸ் மோதியது. இதில் மாணவி உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.;
பள்ளி பஸ் மீது மோதல்
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள பிரபல தனியார் பள்ளிக்கூட பஸ், நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு சித்தாலப்பாக்கத்துக்கு சென்றது. பஸ்சில் 12 மாணவர்கள் இருந்தனர். மேடவாக்கம்-மாம்பாக்கம் சாலையில் சித்தாலபாக்கம் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்று மாணவர்களை இறக்கிக் கொண்டு இருந்தனர்.
அப்போது தாம்பரத்தில் இருந்து சித்தாலப்பாக்கம் வழியாக பொன்மார் செல்லும் மாநகர பஸ் வேகமாக வந்து, அங்கு நின்று கொண்டு இருந்த பள்ளி பஸ்சின் பின் பக்கத்தில் மோதியது. இதில் பஸ்சில் இருந்து இறங்கி கொண்டு இருந்த மாணவர்கள் பெரும் பீதி அடைந்து அலறினர். மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்த பெற்றோர்களும் பதறினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
5 பேர் காயம்
உடனடியாக அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து மாணவர்களை பத்திரமாக பஸ்சை விட்டு கீழே இறக்கினர். இதில் மாணவர்களுக்கு பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஒரு மாணவிக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. ஆனாலும் திடீரென தங்கள் பஸ் மீது மற்றொரு பஸ் மோதி பெரும் சத்தம் கேட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய் காணப்பட்டனர்.
பள்ளி பஸ் மீது மோதியதால் மாநகர பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. முன்பக்க கண்ணாடியும் நொறுங்கியது. பள்ளி பஸ்சின் பின்புறமும் சேதம் அடைந்தது. பஸ்சில் இருந்த 2 பெண்கள், மாநகர பஸ் டிரைவர் காசிநாதன் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
போலீஸ் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் குமார் உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர்.
பின்னர் காயம் அடைந்த மாணவி உள்பட 5 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் விபத்தில் சிக்கிய மாநகர பஸ் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.