எம்.பி.பி.எஸ். தரவரிசை பட்டியல்: 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் திருச்சி பழங்குடியின மாணவர் மாநிலத்தில் முதலிடம்

எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் சேர தரவரிசை பட்டியல் நேற்று வெளியானது. இதில் 7.5 சதவீத அரசு இடஒதுக்கீட்டில் திருச்சி பழங்குடியின மாணவர் மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.

Update: 2023-07-16 19:37 GMT

எம்.பி.பி.எஸ். தரவரிசை பட்டியல்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு கடந்த மே மாதம் 7-ந் தேதி நடந்தது. தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 13-ந்தேதி வெளியானது.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளில் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து தமிழக அரசின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் சேர தகுதியான அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் தர வரிசை பட்டியல் நேற்று வெளியானது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் முதல் 10 இடங்களில் இடம் பிடிக்கவில்லை.

பழங்குடியின மாணவர் முதலிடம்

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர் ஸ்ரீதர் 472 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இதில் திருச்சி மாவட்டம் டாப் செங்காட்டுப்பட்டியில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியை சேர்ந்த மாணவர் சந்திரன் 430 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை ராஜகோபால் விவசாயி. தாய் சின்னக்கால். ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த மாணவர் சந்திரன் 2-வது முறையாக நீட்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தரவரிசை பட்டியல் நேற்று வெளியான நிலையில், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வருகிற 25-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்