விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்; இரும்பு தடுப்புகள் அமைக்க கோரிக்கை

விபத்தில் வாகன ஓட்டிகள் சிக்குவதை தடுக்க இரும்பு தடுப்புகள் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-28 18:56 GMT

ஜெயங்கொண்டம்:

அதிகரிக்கும் வாகன போக்குவரத்து

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே இருக்கிறது. மேலும் ஜெயங்கொண்டம்-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. திருச்சி-சிதம்பரம் புறவழிச் சாலையால் கார், லாரி போன்ற வாகனங்களின் போக்குவரத்து ஓரளவு குறைந்திருக்கிறது. இருப்பினும் ஜெயங்கொண்டம் நகருக்குள் இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. குறிப்பாக வாலிபர்கள் நவீன ரக மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச்செல்கின்றனர்.

மேலும் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்வதற்காக பலர் மோட்டார் சைக்கிள்களில் வந்து செல்கின்றனர். ஜெயங்கொண்டத்தில் உள்ள சிதம்பரம் சாலையில் நான்கு ரோட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் தியேட்டர், இரண்டு புறங்களிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், தனியார் மருத்துவமனை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்கள் போன்றவற்றுக்கும் பலர் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

விபத்துகள்

அவ்வாறு வரும் பலர் இண்டிகேட்டர் போன்ற உரிய சமிஞ்கை செய்யாமல் சாலையை கடக்கின்றனர். இதனால் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகிலும், தியேட்டர் அருகிலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. தினமும் விபத்துகள் ஏற்படும் நிலையில் பலர் காயமடைவதோடு, வாகனங்களும் சேதமடைகின்றன. குறிப்பாக இரவு 7 மணிக்கு மேல் 9 மணி வரை அதிக விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே இந்த பகுதியில் விபத்துகளை தடுப்பதற்கு 2 பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இடையே சாலை தடுப்புகளை அமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்பாக உள்ளது. இது பற்றி ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரத்திடம் கேட்டபோது, அவர் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்