மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; விபத்துக்குள்ளான லாரி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலியானார். விபத்துக்குள்ளான லாரியை போலீஸ் நிலையம் ஓட்டி வந்த போது தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-19 11:57 GMT

விபத்தில் வாலிபர் பலி

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் காத்தவராயன். இவரது மகன் திவ்யகுமார் (வயது 19). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் அடுத்த சிறுவானூரில் உள்ள எனது உறவினரின் வீட்டுக்கு செல்வதற்காக சென்றார். அவர் சிறுவானூர் சாலையில் சென்றபோது எதிரே திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த திவ்யகுமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார். இந்த விபத்தை கண்ட லாரி டிரைவர் வண்டியை அங்கே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார்.

லாரி தீப்பற்றியது

இது சம்பந்தமாக திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரியை போலீசார் மூலம் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்திற்கு ஓட்டி வந்தனர். அந்த விபத்திற்குள்ளான லாரியை போலீசார் ஒருவர் ஓட்டி வந்தார். அந்த லாரி நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே வந்த போது திடீரென லாரி சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது.

இதன் காரணமாக அந்த லாரியில் இருந்து கரும்புகை வந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை கண்ட அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இரண்டு புறமும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றது.

போக்குவரத்து பாதிப்பு

இது பற்றிய தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது தீயணைப்பு துறை அதிகாரிகள் தீப்பற்றி எரிந்த லாரி மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினார்கள். இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதன் காரணமாக திருவள்ளூர் திருப்பதி நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்