மோட்டார் சைக்கிள்-டிராக்டர் நேருக்கு நேர் மோதல்; புதுமாப்பிள்ளை பலி
கல்வராயன்மலையில் மோட்டார் சைக்கிளும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலை ஏரிக் கரை கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளி (வயது 25). இவருக்கும் வில்வத்தி கிராமத்தை சேர்ந்த சினேகா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சினேகா தனது தந்தையை பார்ப்பதற்காக வில்வத்தி கிராமத்திற்கு சென்றார். இதையடுத்து தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக நேற்று காலை வெள்ளி மோட்டார் சைக்கிளில் வில்வத்தி கிராமத்திற்கு புறப்பட்டார். கிளாக்காடு அருகே சென்ற போது, எதிரே வந்த டிராக்டரும், வெள்ளி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
போலீசார் விசாரணை
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வெள்ளி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் கரியாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.