மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; வாலிபர் பலி
சிவகிரி அருகே மோட்டார் சைக்கிளும், மொபட்டும் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார்.
சிவகிரி:
சிவகிரி அருகே ராயகிரி அருணாச்சலம் தொடக்கப்பள்ளி தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கவுதம் (வயது 23). இவர் தனது வீட்டிற்கு அருகே உள்ள காளியம்மன் கோவிலுக்கு மொபட்டில் சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு வரும்போது அதே தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் கரண் (19), ஜீவா என்பவரின் மகன் ஹரிகரசுதன் (17) ஆகிய இருவரையும் ஏற்றிக்கொண்டு தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் ராயகிரி நாராயணகுரு தெருவைச் சேர்ந்த தங்கவேலு என்பவரின் மகன் மனோகரன் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் கவுதம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பின்னால் அமர்ந்திருந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக மனோகரன் மீது சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.