மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; வாலிபர் பலி - 2 பேர் படுகாயம்

திருத்தணி அருகே உறவினரின் திருமணத்திற்கு பத்திரிகை கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றபோது கார் மோதி வாலிபர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2023-06-30 10:56 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை தாலுகா அம்மையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மகேஷ் (வயது 26), ஐய்யப்பன் (30). அதே போல் ஸ்ரீகாளிகாபுரம் சேர்ந்த ஜனார்த்தனம் மனைவி குமாரி (35). இவர்கள் 3 பேரும் உறவினரின் திருமணத்திற்கு பத்திரிகை கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அம்மையார் குப்பத்தில் இருந்து திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்திற்கு சென்றனர்.

அங்கு உறவினரான வசந்தியின் வீட்டில் திருமண பத்திரிகையை கொடுத்துவிட்டு மூவரும் மோட்டார் சைக்கிளில் திருத்தணி நோக்கி வந்துக்கொண்டிருந்தனர். புச்சிரெட்டிப்பள்ளி அருகே வரும்போது எதிரே திசையில் வேகமாக வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது.

இந்த விபத்தில் மகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஐய்யப்பன், குமாரி ஆகியோர் படுகாயமடைந்தனர். இதை கண்ட கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் ஆம்புலன்ஸ்சில் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருத்தணி போலீசார் உயிரிழந்த மகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை தேடி வருகின்றனர். திருமண பத்திரிகை கொடுத்துவிட்டு வீடு திரும்பும் போது வாலிபர் கார் மோதி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்