மோட்டார் சைக்கிளில் டயர் வெடித்ததால் விபத்து; மீனவர் பலி
குளச்சல் அருகே மோட்டார் சைக்கிளில் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் மீனவர் பலியானார்.
குளச்சல்:
குளச்சல் அருகே மோட்டார் சைக்கிளில் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் மீனவர் பலியானார்.
மீனவர்
குளச்சல் அருகே உள்ள குறும்பனை பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன். இவருடைய மகன் கில்சன் ஜோஸ் (வயது36). இவர் குளச்சல் துறைமுகத்தில் விசைப்படகு ஒன்றில் மீன்பிடி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இருக்கு அனுஷா என்ற மனைவி உள்ளார்.
இந்தநிலையில் கில்சன்ஜோஸ் மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகு நேற்று முன்தினம் இரவு கரைக்கு திரும்பியது. இதையடுத்து நேற்று காலையில் கில்சன் ஜோஸ் குறும்பனையில் உள்ள வீட்டிற்கு வந்துவிட்டு மீன்களை இறக்குவதற்காக மீண்டும் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
டயர் வெடித்தது
வாணியக்குடியில் சென்றபோது மோட்டார் சைக்கிளின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கில்சன் ஜோசை தூக்கி வீசி யது. இதில் படுகாயமடைந்த கில்சன் ஜோசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கில்சன் ஜோஸ் பரிதாபமாக இறந்தார்.
சோகம்
இதுபற்றி குளச்சல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று கில்சன்ஜோசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓடும் மோட்டார் சைக்கிளில் டயர் வெடித்து மீனவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.