பஸ்சில் இருந்து குதித்து 5 குழந்தைகளின் தாய் தற்கொலை: உடலை வாங்க மறுத்து சாலைமறியல்

மதுரை திருமங்கலம் அருகே பஸ்சில் இருந்து குதித்து 5 குழந்தைகளின் தாய் தற்கொலை சம்பவத்தில் தொடர்பு உடையவர்களை கைது செய்யக்கோரி மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது.

Update: 2023-04-13 21:18 GMT


மதுரை திருமங்கலம் அருகே பஸ்சில் இருந்து குதித்து 5 குழந்தைகளின் தாய் தற்கொலை சம்பவத்தில் தொடர்பு உடையவர்களை கைது செய்யக்கோரி மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது.

5 குழந்தைகளின் தாய்

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி நாகலட்சுமி(வயது 31). இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் நாகலட்சுமி, தன்னுடைய 2 மகள்களுடன் அரசு பஸ்சில் பெரியார் பஸ் நிலையம் வந்து கொண்டிருந்தார். அந்த பஸ் சிவரக்கோட்டை அருகே வந்தபோது, திடீரென நாகலட்சுமி ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். ரத்தவெள்ளத்தில் மிதந்த அவரை சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது பாதி வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னுடைய சாவுக்கு 3 பேர் காரணம் என அவர்களின் பெயர்களையும் நாகலட்சுமி எழுதி வைத்துள்ளார். இதுதொடர்பாக மையிட்டான்பட்டி கிராமத்தில் கூடுதல் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் விசாரணையும் நடத்தினர்.

சாலை மறியல் போராட்டம்

இந்தநிலையில் நாகலட்சுமியின் உடல், பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அவரது உறவினர்கள் திரண்டிருந்தனர். இதற்கிடையே, நாகலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், கணவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், தற்கொலைக்கு தூண்டிய 3 பேர் மீதும் கிரிமினல் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என கோரி மதுரை அரசு ஆஸ்பத்திரியின் பிரதான சாலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் நாகலட்சுமியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் தலைமை தாங்கினார். இதில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் லாசர், கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் கணேசன், மாநில குழு உறுப்பினர்கள் விஜயராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கலெக்டரிடம் மனு

மறியலில் ஈடுபட்டவர்களிடம், போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

இறந்த நாகலட்சுமி உடலானது, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிணவறையில் உள்ளது. குடும்பத்தினர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறிவிட்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்