பண்ருட்டி அருகே ரோட்டில் தனியாக சென்ற தாய், மகள் மானபங்கம் 2 வாலிபர்கள் கைது
பண்ருட்டி அருகே ரோட்டில் தனியாக சென்ற தாய், மகள் மானபங்கப்படுத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;
பண்ருட்டி,
பண்ருட்டி பகுதியை சேர்ந்த 35 வயது பெண், சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் தனது 12 வயது மகளுடன் ஒரு மொபட்டில் தோப்பு கொல்லைரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெட்ரோல் இல்லாமல், நடுவழியில் மொபட் நின்றது. இதையடுத்து மொபட்டை தள்ளிக்கொண்டு அவர்கள் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த பண்ருட்டி கீழக்குப்பத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் ஆதி என்கிற ஆதிகுரு (வயது 22), நடுகுப்பத்தை சேர்ந்த செம்புலிங்கம் மகன் செல்வகுமார் (27) ஆகியோர், அந்த பெண்ணின் மொபட் சாவியை எடுத்து சென்றனர். அவர்களை அந்த பெண் துரத்தி சென்ற போது, அவரது சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளனர். இதை பார்த்து அவரது மகள் சத்தம் போட்டார். அவரையும் விட்டுவைக்காமல் இருவரும் சிறுமியை கட்டிபிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆதிகுரு, செல்வகுமார் ஆகியோர் முந்திரி தோப்பு வழியாக தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவு ஆதிகுரு, செல்வகுமார் ஆகியோரை கைது செய்தார். நடுரோட்டில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.