வீடுகளில் முருங்கை விதை நடவு செய்யும் பணி
வீடுகளில் முருங்கை விதை நடவு செய்யும் பணியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார்.;
முருங்கை விதை
ராமநாதபுரம் அருகே எல்.கருங்குளம் கிராமத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் முருங்கை விதைகளை வீடுகளில் நடவு செய்யும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின்கீழ் திருப்புல்லாணி, மண்டபம், கமுதி யூனியன்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் முருங்கை விதைகளை வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் பெண்கள் ரத்த சோகையின்றி ஆரோக்கியமான உடல்நிலையுடன் குழந்தை பெற்றெடுக்க உதவும் வகையிலும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்துடன் வளர்ந்திடும் வகையிலும் அவர்களுக்கு வழங்கிடும் விதமாக மருத்துவ குணமுள்ள முருங்கை விதைகள் நடவு செய்யப்படுகின்றன.
ஊட்டச்சத்து குறைபாடு
இந்த விதைகள் தோட்டக்கலைத்துறையில் கொள்முதல் செய்யப்பட்டு நடவு செய்யப்படுகின்றன. அவற்றை முறையாக பராமரித்து பயன்பெற்றிட பயனாளிகளுக்கு அறிவுறித்திடும் வகையிலும், அவற்றின் மருத்துவ தொடர்புடைய குணங்களை அறிந்திடும் வகையிலும் அங்கன்வாடி பணியாளர்கள், சமூக நலத்துறையின் களப்பணியாளர்கள் ஒருங்கிணைந்து பராமரித்திடும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரத்தசோகை வராமல் தடுக்க பெண்கள், குழந்தைகள் முருங்கை கீரை சாப்பிட வேண்டும்.
எனவே பயனாளிகள் தங்கள் வீடுகளில் நடவு செய்யப்படும் முருங்கை விதைகளை முறையாக பராமரித்து அதன் மூலம் கிடைத்திடும் நன்மைகளை பெற்று ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் வாழ்ந்திட வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியில் லாந்தை ஊராட்சி தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், மாவட்ட சமூகநல அலுவலர் தேன்மொழி, திட்ட அலுவலர் விசுபாவதி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.