பெரியாறு பாசனத்துக்கு மேலும் கிராமங்களை சேர்க்க வேண்டும்

பெரியாறு பாசனத்துக்கு மேலும் கிராமங்களை சேர்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-07-09 18:45 GMT

சிவகங்கை

பெரியாறு பாசனத்துக்கு மேலும் கிராமங்களை சேர்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பெரியாறு பாசனம்

முல்லைப்பெரியாறு, வைகை அணை மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பயன்பெறுகின்றனர். கம்பம் பள்ளத்தாக்கு, பேரணை முதல் கள்ளந்திரி வரை இருபோகம், கள்ளந்திரி முதல் சிவகங்கை அருகே சோழபுரம் எட்டுச்சேரி கண்மாய் வரை ஒரு போகம், திருமங்கலம் விரிவாக்க கால்வாய், 18-ம் கால்வாய், லெசிஸ் கால்வாய், 48-வது கால்வாய், கட்டாணிப்பட்டி 1-2 கால்வாய் என பல ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட ஒப்பந்தப்படி பெரியாறு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசன நேரடி ஆயக்கட்டில் 143 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்கள் மூலம் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஒரு போக பாசன பகுதியாக உள்ளன. பெரியாறு பாசன பகுதி மேலூர் பிரிவின் கீழ் உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக மேலூர் பிரிவில் ஒரு போக சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டும் சிவகங்கை மாவட்ட பகுதிகளுக்கு உரிய நீர் வழங்கப்படுவதில்லை. ஆண்டுதோறும் இப்பிரச்சினை தொடர்ந்து வருகிறது.

மேலும் கிராமங்களை சேர்க்க வேண்டும்

பெரியாறு பாசனம் மூலம் கட்டாணிப்பட்டி ஒன்று மற்றும் இரண்டாம் கால்வாய் வழியாக 20 கண்மாய்கள், 48-வது மடைக்கால்வாயின் மூலம் 16 கண்மாய்கள், சீல்டு கால்வாய் மூலம் 41 கண்மாய்கள், லெஸ்சிஸ் கால்வாய் மூலம் 52 கண்மாய்கள் பயன்பெறுகின்றன. பெரியாறு பாசன ஆயக்கட்டுப்பகுதியில் சிவகங்கை அருகேயுள்ள கீழப்பூங்குடி, வீரப்பட்டி, பேரணிப்பட்டி, பிரவலூர், நாலுகோட்டை, ஒக்கூர், ஒ.புதூர், கருங்காபட்டி, மேலமங்கலம், குளக்கட்டப்பட்டி, இடையமேலூர், காஞ்சிரங்கால், கூவாணிப்பட்டி, மங்காம்பட்டி, ஈசனூர், வேளாங்கப்பட்டி, மம்மரங்காபட்டி கிராமங்கள் உள்பட மேலும் பல கிராமங்களை சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே பெரியாறு பாசன விவசாய ஆயக்கட்டு குறித்து மறு அளவீடு செய்ய வேண்டும் என சிவகங்கை மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

மறுஅளவீடு

பாசன பகுதிகளில் கட்டுமானங்கள் அதிகரித்து விட்டன. எனவே 5 மாவட்டங்களில் பெரியாறு, வைகை ஆயக்கட்டு குறித்து மறு அளவீடு செய்து அதன்படி நீர் பகிர்ந்தளிக்க வேண்டும். இதனால் சிவகங்கை மாவட்டம் அதிக பயன்பெற வாய்ப்புள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீட்டிப்பு மற்றும் விஸ்தரிப்பு கால்வாய்களை நேரடி கால்வாயாக (ரெகுலர்) மாற்ற வேண்டும். மாணிக்கம் நீட்டிப்பு கால்வாய், சிங்கம்புணரி, திருப்பத்தூர் நீட்டிப்பு விஸ்தரிப்பு கால்வாய், லெஸ்சிஸ் நீட்டிப்பு விஸ்தரிப்பு கால்வாய், 9-வது நீட்டிப்பு கால்வாய், இலுப்பகுடி நீட்டிப்பு கால்வாய், படமாத்தூர் நீட்டிப்பு கால்வாய் ஆகியன சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்வாய்களை நேரடி ஆயக்கட்டு கால்வாயாக மாற்றினால் 50 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்