சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை..!!

காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

Update: 2023-05-01 05:42 GMT

சென்னை,

கோடை வெயிலுக்கு இதமாக கடந்த ஒரு வாரத்துக்கு மேல் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழையும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதன்படி தற்போது நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, வேளச்சேரி, ஆலந்தூர், மீனம்பாக்கம் , பல்லாவரம், குரோம்பேட்டை, அசோக் நகர், கோயம்பேடு, தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து வருகின்றது.

இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்