'மொபைல் முத்தம்மா' திட்டம் ; ரேஷன் கடைகளில் செல்போன் மூலம் பணம் செலுத்தும் வசதி - சென்னை புறநகர் பகுதிகளில் அறிமுகம்

‘மொபைல் முத்தம்மா' என்ற திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் செல்போன் மூலம் பணம் செலுத்தும் வசதி சென்னை புறநகர் பகுதிகளில் அறிமுகமாகி உள்ளது.

Update: 2023-10-15 13:48 GMT

கடற்கரை, ரெயில்களில் சுண்டல் விற்பவர்கள் முதல் எங்கெங்கு நோக்கிலும் 'யு.பி.ஐ. டிஜிட்டல்' பரிவர்த்தனை முறையை பார்க்க முடிகிறது. இதனால், செல்போன் கையில் இருந்தாலே போதும் பணம் செலுத்த முடியும் என்ற நிலை நிலவுகிறது.

டீ கடை, மளிகைக் கடை, காய்கறிக் கடை என அனைத்து கடைகளிலும் 'யு.பி.ஐ. டிஜிட்டல்' பரிவர்த்தனை முறை செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மக்களின் நலன் கருதி ரேஷன் கடைகளிலும் 'யு.பி.ஐ. டிஜிட்டல்' பரிவர்த்தனை முறை மூலம் பணம் செலுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் 'யு.பி.ஐ. டிஜிட்டல்' பரிவர்த்தனை முறை மூலம் பொருட்களை வாங்கிக் கொள்ளும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என சட்டசபையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், சென்னை அம்பத்தூர், ஆவடி புறநகர் பகுதிகளில் உள்ள 588 ரேஷன் கடைகளில் 562 ரேஷன் கடைகளில் 'யு.பி.ஐ. டிஜிட்டல்' பரிவர்த்தனை முறையில் பொருட்களை பெற்றுக்கொள்ளும் 'மொபைல் முத்தம்மா' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள கடைகளில் விரைவில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் 'மொபைல் முத்தம்மா' என்ற பெயரில், எப்படி பணம் இல்லாமல் செல்போன் மூலம் பொருட்களை வாங்கலாம் என ரேஷன் கடைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர் முழுவதும் மொத்தமாக 1,700-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ள நிலையில், 1,500-க்கும் மேற்பட்ட கடைகளில் இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் விரைவில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்