ஆவடி அருகே ரவுடி வெட்டிக்கொலை - மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த கும்பல் வெறிச்செயல்

ஆவடி அருகே ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பூந்தமல்லி கோர்ட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது.

Update: 2023-10-13 08:33 GMT

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கண்ணதாசன். இவருடைய மகன் சரண் என்ற பச்சைக்கிளி (வயது 21). ரவுடியாக வலம் வந்தார்.

2019-ம் ஆண்டு ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கண்ணதாசன் என்பவரை 10 பேர் சேர்ந்து கொலை செய்தனர். இந்த வழக்கில் சென்னை ஜெ.ஜெ.நகர் போலீசார் சரண் உள்பட சிலரை கைது செய்தனர். பின்னர் கைதானவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். அதில் 3 பேர் வேறொரு வழக்கில் தற்போது சிறையில் உள்ளனர்.

நேற்று காலை சரண், பூந்தமல்லி கோர்ட்டுக்கு வழக்கு சம்பந்தமாக அழைத்து வரப்பட்ட தனது நண்பர்களை பார்த்துவிட்டு மற்றொரு நண்பர் சந்தோஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது கோர்ட்டில் இருந்து சரணை 6 பேர் கொண்ட கும்பல் மோட்டார்சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்தனர். ஆவடி அருகே பருத்திப்பட்டு, திருவேற்காடு, அயப்பாக்கம் ஆகிய 3 பகுதிகளுக்கும் செல்லக்கூடிய சந்திப்பு பகுதியில் அவர்கள் இருவரும் வந்தபோது, மர்ம நபர்கள் சரணை வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரண் மற்றும் அவரது நண்பர் சந்தோஷ் இருவரும் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினர். இருவரும் வெவ்வேறு திசைகளில் ஓடினர். சரண், பருத்திப்பட்டு செல்லும் சாலையில் உள்ள முட்புதரில் இறங்கி தப்பி ஓடினார். அவரை பின்தொடர்ந்து விரட்டிச்சென்ற கும்பல், அங்கு தப்பி ஓட வழியில்லாமல் முட்புதரில் சிக்கி கொண்ட சரணை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை, முகம் உள்பட உடலின் பல இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சரண், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆவடி போலீஸ் இணை கமிஷனர் விஜயகுமார், துணை கமிஷனர் பாஸ்கரன், உதவி கமிஷனர் அன்பழகன் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவள்ளுவர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலையான சரண் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபர்களின் உருவங்களை வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கண்ணதாசன் கொலை வழக்கில் பழிக்குப்பழியாக அவர்களது ஆதரவாளர்கள் சரணை கொலை செய்தார்களா? அல்லது முன்விரோதம் காரணமாக வேறு யாராவது கொன்றனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்