பெண்களின் கனவுகளை மு.க.ஸ்டாலின் நனவாக்கி உள்ளார்
உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கி பெண்களின் கனவுகளை மு.க.ஸ்டாலின் நனவாக்கி உள்ளார் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்:
உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கி பெண்களின் கனவுகளை மு.க.ஸ்டாலின் நனவாக்கி உள்ளார் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமை தொகை
குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்ட தொடக்க விழா திருவிதாங்கோடு பெரியநாயகி சமூகநல கூடத்தில் நேற்று நடந்தது. விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று ரூ.1000 வழங்குவதற்கான ஏ.டி.எம். அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகள் முதல் பல்வேறு தரப்பட்ட கூலி தொழில் செய்யும் பெண்கள் பயன் அடையும் விதமாக கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு வங்கி கணக்கில் ஆயிரம் செலுத்தி ஏ.டி.எம். மூலம் அந்த பணத்தை பெற்று பயனடையலாம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற நாளில் இருந்து தமிழ்நாட்டின் அனைத்து தரப்பட்ட பெண்களின் கனவுகளை நனவாக்கி உள்ளார். இதே போல மகளிருக்கு இலவச பஸ் பயணம், உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
உறுதிமொழி ஏற்பு
இதைத் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் விழாவில் பங்கேற்ற அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
விழாவில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) பாபு, உதவி கலெக்டர் (பயிற்சி) ராஜட் பீட்டன், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) பீபீ ஜாண், மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு) புகாரி, தாசில்தார்கள் கண்ணன், முருகன், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் நசீர், பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள்சோபன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், தி.மு.க. பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் வீர வர்க்கீஸ், ஒன்றிய செயலாளர் அருளானந்த ஜார்ஜ், கோதநல்லூர் பேரூராட்சி தலைவி கிறிஸ்டல் பிரேமகுமாரி, கவுன்சிலர்கள் விக்னேஷ், பிரைட்சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.