'உடன்பிறப்புகளாய் இணைவோம்' மூலம் தி.மு.க.வில் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி

‘உடன்பிறப்புகளாய் இணைவோம்' மூலம் தி.மு.க.வில் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் பணியினை அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்கும் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Update: 2023-03-27 18:23 GMT

கட்டணம் ரூ.10

தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 22-ந்தேதி நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானத்தின்படி, அடுத்த மாதம் 3-ந்தேதி முதல் ஜூன் மாதம் 3-ந்தேதி வரை 'கருணாநிதி நூற்றாண்டு மற்றும் தி.மு.க. பவள விழா ஆண்டு' உறுப்பினர்களை சேர்த்தல் பணிகளை 'உடன்பிறப்புகளாய் இணைவோம்' என்ற மாபெரும் முன்னெடுப்புடன் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியினை மேற்கொள்ளவேண்டும் என தலைமைக்கழகம் முடிவெடுத்துள்ளதால், கட்சியினர் குறிப்பிட்ட தேதி முதல் உறுப்பினர்களை சேர்க்கும் பணியை தொடங்கி உடனுக்குடன் படிவங்களை தலைமைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கட்சியில் உறுப்பினராக இல்லாதவர்களை மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும். உறுப்பினர் கட்டணமாக ரூ.10 செலுத்தவேண்டும். உறுப்பினர் சேர்க்கை படிவத்துக்கான கட்டணம் படிவம் ஒன்றுக்கு ரூ.25 ஆகும். உறுப்பினருக்கான கட்டண தொகையை 'மணியார்டர்', வங்கி வரைவோலை மூலம் அனுப்புகிறவர்கள் அந்த கட்டண தொகை விவரத்தையும் மணியார்டர் ரசீது அல்லது வங்கி வரைவோலை எண்ணையும் அதற்கென்று படிவத்தில் உள்ள கட்டத்துக்குள் குறித்து அனுப்பவேண்டும். உறுப்பினர்களை அவர்கள் குடியிருக்கும் முகவரியிலோ அல்லது தொழில் செய்யும் முகவரியிலோ உறுப்பினராக சேர்க்கலாம்.

உரிமைச்சீட்டு

உறுப்பினராக சேர விரும்புவோர் உறுப்பினர் படிவத்தில் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை கட்டாயம் குறிப்பிடுவதுடன், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயர், எண், புகைப்படம் உள்ள முதல் பக்கத்தினை நகல் எடுத்து இணைக்கவேண்டும். உறுப்பினர் பதிவுத்தாளில் சம்பந்தப்பட்ட வார்டு கிளையின் நிர்வாகிகள், அந்தந்த பகுதியை சேர்ந்த மேலமைப்பு நிர்வாகிகள், அந்தந்த மாவட்ட, மாநகர், மாநகர நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், தலைமை செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், அந்தந்த பகுதியை சேர்ந்த நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இதற்கு முன்னதாக நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள் ஆகியோரில் எவரேனும் ஒருவர் கையொப்பமிட்டு உறுப்பினர் விண்ணப்ப படிவங்களில் பரிந்துரை செய்யும் தகுதி பெற்றவர்களாவர்.

உறுப்பினர் விண்ணப்ப படிவங்களையும், அதற்குரிய கட்டண தொகையினையும் பொதுச்செயலாளர், தி.மு.க. தலைமை நிலையம், அண்ணா அறிவாலயம், 367/369 அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். உறுப்பினர் படிவங்களுடன் உறுப்பினர் கட்டண தொகை தலைமைக்கழகத்துக்கு கிடைத்த பின்னரே படிவங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். பரிசீலித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட படிவங்களில் இடம்பெற்றவர்களுக்கு மட்டுமே உறுப்பினர் உரிமைச்சீட்டு வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்