தேனியில் பரிதாபம்:பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி கால் நசுங்கியது
தேனியில் பஸ்சில் நீட்டிக் கொண்டு இருந்த கம்பி இடித்ததால், அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி கால் நசுங்கியது.
மூதாட்டி
கண்டமனூரை சேர்ந்த மாரியப்பன் மனைவி பாண்டியம்மாள் (வயது 80). இவர், போடியில் உள்ள தனது பேத்தி வெண்ணிலா வீட்டுக்கு செல்வதற்காக கண்டமனூரில் இருந்து தேனி பஸ் நிலையத்துக்கு நேற்று வந்தார். அங்கு அரசு பஸ்சில் இருந்து இறங்கி, போடி செல்லும் பஸ்சில் செல்வதற்காக நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மயிலாடும்பாறைக்கு செல்லக்கூடிய அரசு டவுண் பஸ் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அந்த பஸ்சில் டிரைவர் இருக்கைக்கு வெளிப்புற பகுதியில் இரும்பு பட்டைக் கம்பி ஒன்று வெளியே நீட்டிக் கொண்டு இருந்தது. அந்த கம்பி பாண்டியம்மாளின் இடித்ததாக கூறப்படுகிறது. இதனால் தடுமாறி விழுந்த அவருடைய கால் மீது அந்த டவுன் பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது.
கால் நசுங்கியது
இதில் அவருடைய இடதுகால் நசுங்கியது. வலியால் துடித்த பாண்டியம்மாளை அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து பஸ் டிரைவரான தும்மக்குண்டு மணலூத்து குடிசையை சேர்ந்த அன்பழகன் (49) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே, இதுபோன்று பராமரிப்பு குறைபாட்டுடன் கம்பிகள் நீட்டிக் கொண்டு இருக்கும் அரசு பஸ்களால் மேலும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.