அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன் 14-ந் தேதி மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு 2 முறை தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து, தன் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில், மருத்துவ காரணங்களை கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என கூறி ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதனை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற திங்கட்கிழமை நடைபெற உள்ளது. நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா.எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு ஜாமீன் மனுவை விசாரிக்கவுள்ளது