கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் 520 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் 520 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

Update: 2022-08-06 07:26 GMT

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் 520 நபர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து ஒப்பியாய்டு மாற்று சிகிச்சை மையத்தையும் திறந்து வைத்தார். மேலும் காப்பகத்தில் சிகிச்சை பெறும் நபர்கள் பயிரிட்ட காய்கறிகளின் கண்காட்சியையும் அமைச்சர் பார்வையிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்ததாவது:-

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் 800 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 900 தனியார் ஆஸ்பத்திரிகள் என மொத்தம் 1,700 ஆஸ்பத்திரிகளில் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் உயர் சிறப்பு சிகிச்சைகள் மற்றும் பல்வேறு வகையான மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட நபர்களும் இத்திட்டத்தின் மூலம் பயன் அடைந்து வருகின்றனர். அரசு மனநல காப்பகத்தில் குடும்ப அட்டை மற்றும் வருமான சான்றிதழ் இன்றி சிகிச்சையில் இருக்கும் 520 பேர், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற பயனாளிகளாக இன்று (நேற்று) சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒப்பியாய்டு மாற்று சிகிச்சை மருத்துவ திட்டம், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் செயல்படும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு குழுமத்துடன் (டான்சாகஸ்) இணைந்து தமிழகத்தில் முதன் முறையாக அரசு மனநல காப்பகத்தில் செயல்பட உள்ளது. ஒப்பியாய்டு மாற்று சிகிச்சை போதை ஊசிகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவும் சிகிச்சை முறையாகும். இதன் மூலம் போதை மற்றும் ஒப்பியாய்டு சார்புடையோர் பயன்பெற்று அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இயலும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வில்லிவாக்கம் எம்.எல்.ஏ. வெற்றியழகன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு, சென்னை மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் தேரணிராஜன், அரசு மனநல காப்பகத்தின் இயக்குநர் டாக்டர் பூர்ணசந்திரிக்கா மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்